காமராஜர் பெயர்… காங்கிரஸ் செயல்; லஞ்சத்தால் விருதுநகரில் கொந்தளிப்பு!

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் புகழை இன்னும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும் பெரியவர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்தோம். சட்டைப் பையிலிருந்த செய்தித்தாள் கட்டிங்கை மெதுவாக எடுத்துக் காண்பித்த அவர், அதிலிருந்த செய்தியைச் சுட்டிக்காட்டியபடியே, கிண்டல் கலந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அந்தச் செய்தி, ‘விருதுநகரில் காங்கிரஸார் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற கொள்கை முழக்கத்தோடு கையெழுத்து இயக்கம் நடத்தினர்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது.

அதைச் சுட்டிக்காட்டிய அந்தப் பெரியவர், “காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால், பெருந்தலைவர் பிறந்த மண்ணிலேயே இந்த மாதிரியான அரசியல் அரங்கேறுவதைப் பார்த்தால் மனம் கொதிக்கிறது; பொறுத்துக்கொள்ள முடியவில்லை,” என்றார். அவர் ஏன் அப்படி ஆதங்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள, அந்தக் கையெழுத்து இயக்கத்தின் பின்னணியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசு நிர்வாகத்தில் வேரூன்றியுள்ள லஞ்சம், ஊழலை எதிர்த்து மக்களிடையே 
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. பெருந்தலைவர் காமராஜரின் நேர்மையான ஆட்சிக் கொள்கையை நினைவூட்டும் விதமாகவும், ‘லஞ்சம் வாங்க மாட்டோம்; லஞ்சம் கொடுக்க மாட்டோம்’ என்ற உறுதிமொழியை மக்களிடம் வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

“நல்ல காரியம்தானே… இதில் உங்களுக்கு என்ன வேதனை?” என்று அந்தப் பெரியவரிடம் கேட்டோம். அதற்கு அவர், “நான் சொல்வது நூற்றுக்கு நூறு விருதுநகரே அறிந்த உண்மை. காங்கிரஸ் பிரபலம் ஒருவர் நகராட்சித் தலைவராக இருந்த காலத்தில்தான் குடிநீர் குழாய் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தமான ஒருவரையாவது அந்தக் கட்சியால் அடையாளம் காட்ட முடியுமா? இங்கே ஒருவர் பெட்டிக்கடை நடத்திக்கொண்டிருந்தார். பிறகு யூனியன் கான்ட்ராக்டராகி முறைகேடான வழியில் பெருமளவு பணம் சேர்த்தார்.

அதன்பிறகு ஊராட்சி மன்றத் தலைவராகி இன்னும் அதிகமாகச் சொத்து குவித்துள்ளார். அப்படிப்பட்டவருக்குத்தான் இன்று காங்கிரஸ் கட்சி முக்கியப் பொறுப்பை கொடுத்துள்ளது. போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடங்கி காமன்வெல்த் ஊழல் வரை பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்கிய வரலாறு கொண்ட கட்சி, இன்று காமராஜரின் பெயரை முன்வைத்து ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்று முழக்கமிடுவது வேடிக்கையாகவே இருக்கிறது,” என்று குமுறியவர், கலங்கிய கண்களைத் துண்டால் துடைத்துக்கொண்டார். விருதுநகரில் காமராஜரின் பெயர் ஒலித்தது; ஆனால் அவரது நேர்மை ஒலிக்கவில்லை. 

Source link