தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து த.வெ.க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் இத்திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் சுமார் 12.87 லட்சம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நெஞ்சார்ந்த வரவேற்பை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இத்திட்டத்தின் பெயர் இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்:
விரிவாக்கம்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15,454 பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறுவர்.
பயனாளிகள் எண்ணிக்கை: வருகைப்பதிவு அடிப்படையில் சுமார் 12.87 லட்சம் மாணவர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
நிதி ஒதுக்கீடு: ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ரூ.12.71 வீதம், 210 பள்ளி வேலைநாட்களுக்கு ஆண்டிற்கு ரூ.343.55 கோடி உத்தேச செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ.268.72 கோடி நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு:
காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளார். “ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வாழ்நாளெல்லாம் உழைத்த காமராஜருக்குச் செய்யப்பட்ட மிகச்சரியான மரியாதை இது” எனத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
