திருப்பதி:திருப்பதியின் முதல் மலைப்பாதையின் 7 வது மைல் அருகே ஒரு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதியின் முதல் மலையின் 7வது மைல் அருகே பெரிய ஆஞ்சநேயர் சிலை அருகே, பக்தர்கள் வைத்த ஒரு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை காணாமல் போனது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.
அதில், இன்று( ஜூலை 21) அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அந்த சிலையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த நபர் இளம் மஞ்சள் அல்லது காவி நிறத்தில் உடை உடன் கோவிந்த மாலை கழுத்தில் அணிந்திருந்தார். ராயலசீமா பகுதியில் பயன்படுத்தப்படும் தெலுங்கு மொழியை பேசியதுடன், இரண்டு மொபைல்போன்கள் மற்றும் தோளில் பை ஒன்றை அணிந்து இருந்தார்.அவர் 7 வது மைல் பகுதியில் இருந்து ஜீப்பில் ஏறி சென்றது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
