10 ஆண்டுகளில் 152 பேப்பர் லீக், 0 தண்டனை: பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியதன் தொடர்ச்சியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தியாவின் கல்வி முறை முற்றிலுமாக சீரழிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி முன்வைத்த 5 முக்கிய அம்சங்கள்;

1. மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோவைக் காட்டி பேசிய ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போது அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், என் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் மாணவர்களின் நலனே முக்கியம் எனக் கூறிய அவர், தன்னை அழைத்துச்சென்ற காவல் துறையினரே நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2. சீரழிந்துவிட்ட கல்வி முறை: கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 152 முறை தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும், இதனால் 7.5 கோடி மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் கல்வி பட்ஜெட் சுமார் ரு.1.4 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்காக மட்டுமே ஒட்டுமொத்தமாக ரூ.1.32 லட்சம் கோடி வரை செலவிடும் சூழல் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், நமது கல்வி முறை நியாயமற்றதாகவும், ஏழை எளியவர்களால் அணுக முடியாத அளவிலும் மாறியுள்ளது என்றார்.

3. தர்மேந்திர பிரதான் ராஜினாமா & பிரதமர் மன்னிப்பு கோரிக்கை: கல்வி முறையை சரிவர நடத்தத் தவறியதால் மாணவர்கள் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோருவதாகவும், அவர் மாணவர்களின் கோபத்தின் குறியீடாக மாறிவிட்டதால் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இத்தனை தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

4. விவாதத்தை தவிர்க்கும் மத்திய அரசு: நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சபாநாயகரும் அரசு தரப்பும் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த பிரச்சனையை விவாதிக்காமல் மூடி மறைக்கவே மத்திய அரசு முயல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

5. மாணவர் போராட்டங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு: நீட் விவகாரத்தில் மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் முழுமையாக (100%) ஆதரவளிப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தும் அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு கர நீட்டும் என்று உறுதி அளித்தார்.

Source link