-டில்லி சிறப்பு நிருபர்-
‘கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களை வயது வந்தோராக கருதி விசாரணை நடத்தலாம்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த 2022ல் மற்றொரு சிறுவனை கழுத்தை அறுத்து படுகொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த பாட்னா ஐகோர்ட், ‘கொடூர குற்றச் செயலில் ஈடுபட்டதால், சிறார் என கருதாமல், வயது வந்தோராக கருதி விசாரணை நடத்தலாம்’ என, சிறார் நீதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிறுவன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302ன் கீழ் தொடரப்படும் கொலை வழக்குகள் அனைத்தும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கொடூர குற்றம் என்ற பிரிவிலேயே வரும். எனவே, கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களை வயது வந்தோராக கருதி சிறார் நீதி வாரியங்கள் விசாரணை நடத்தலாம்.
அதே சமயம், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனின் மனநிலை, உடல்நிலை, குற்றத்தின் தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளும் திறன், குற்றம் நடந்த சூழல் ஆகியவற்றை சிறார் நீதி வாரியங்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.
உளவியலாளர்களின் அறிக்கைகளை மட்டும் இயந்திரத்தனமாக ஏற்க கூடாது. பிற ஆதாரங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
