சென்னை: பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்ய புதிய குழு ஒன்றை அமைத்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு’
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழிக்காட்டுதலின்படி ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.
இந்த குழு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என முழுமையாக அறிக்கை தயார் செய்து விரைவாக அளிக்கும். அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்குழுவிற்கு திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் தலைவராகவும், திருக்கோயில் இணை ஆணையர், பழநி வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் துணை கலெக்டர், உதவி இயக்குநர் (நில அளவை), தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.
பழநி திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து கோயில் சொத்துகளை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து ஆய்வு செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆலோசனையின் படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
