இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அதே அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரோன் கேமரா ஆர்டர் செய்த இளைஞர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். தொழிலின் நிமித்தமாகவும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் அடிக்கடி பயணம் செய்யும் பழக்கம் கொண்ட பிரபுவுக்கு, தான் செல்லும் இடங்களில் உள்ள இயற்கை அழகைப் படம்பிடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக ஒரு நல்ல ட்ரோன் கேமரா வாங்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
அப்போதுதான், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகக் குறைந்த விலையில் ட்ரோன் கேமரா விற்கப்படுவதாக ஒரு விளம்பரம் கண்ணில் பட்டுள்ளது. பொதுவாக சந்தையில் ஆயிரக்கணக்கில் விற்கப்படும் ட்ரோன், மிக மலிவான விலையில் கிடைப்பதாகப் பார்த்ததும் பிரபு அதை வாங்க ஆர்வம் காட்டினார். விளம்பரத்தில் இருந்த லிங்க்கை கிளிக் செய்து ட்ரோனை ஆர்டர் செய்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்த விளம்பரம்
ஆர்டரை உறுதி செய்ய முதலில் 200 ரூபாய் மட்டும் முன்பணமாக செலுத்தினால் போதும் என்றும், மீதித் தொகையை பார்சல் கைக்கு வந்தவுடன் கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery) முறையில் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என்று நம்பிய பிரபுவும் ₹200-ஐ ஆன்லைனில் செலுத்தினார். இரண்டு நாட்களில் கூரியர் மூலம் பார்சலும் வந்தது. மீதித் தொகையையும் சேர்த்து மொத்தம் ₹2,200 பணத்தைக் கூரியர் ஊழியரிடம் கொடுத்துவிட்டு பார்சலை வாங்கியுள்ளார்.
பொதுவாக ஆன்லைனில் வாங்கும் பார்சல்களைப் பிரிக்கும்போது வீடியோ எடுக்கும் பழக்கம் பிரபுவுக்கு இருந்துள்ளது. அதேபோல, இந்த பார்சலையும் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே பிரித்துள்ளார். ஆனால், பார்சலைத் திறந்த பிரபுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. உள்ளே அவர் ஆசையாக ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவுக்குப் பதிலாக, வெறும் இரண்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபு, இது குறித்துப் பேசுகையில் எனக்கு உருவான இழப்பு ₹2,200 தான். பணத்தை விடவும், இப்படி ஏமாந்துவிட்டோமே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று என்னைப்போல பலர் அவசரப்பட்டு ஆர்டர் செய்து ஆயிரக்கணக்கில் பணத்தை இழக்கக்கூடும். எனவே, சோஷியல் மீடியாக்களில் வரும் போலியான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கவால்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் அறியப்படாத அறிமுகமில்லாத இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் பொருட்களை வாங்கும் முன், அந்த நிறுவனம் நம்பகமானதுதானா என்பதை ஒன்றுக்கு பலமுறை சரிபார்ப்பதே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாகும்.
