சென்னை: ''விஜய் அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான், அந்த கட்சியிலிருந்து வெளியே

சென்னை: ”விஜய் அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான், அந்த கட்சியிலிருந்து வெளியே வந்தேன். த.வெ.க.,வில் பெண்களுக்கு அவமரியாதை தொடர்கிறது” என, தி.மு.க.,வில் இணைந்த, நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

‘அண்ணாத்த’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில், ரஞ்சனா நாச்சியார் நடித்துள்ளார். ‘டிவி’ சீரியலிலும், நடித்து வருகிறார். திரைப்பட இயக்குனர் பாலாவின் அண்ணன் மகளான ரஞ்சனா நாச்சியர், அரசியல் ஆர்வம் மிகுதியால், பா.ஜ.,வில் இணைந்தார்.

பின், த.வெ.க.,விற்கு தாவினார். அக்கட்சியில் ஆரம்ப கட்ட பணிகளில், தீவிரமாக ஈடுபட்டார். பின்னர், கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து விமர்சிக்க துவங்கினார். பெண்களுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை என, குற்றம்சாட்டினார். விஜய், அவரது மனைவி சங்கீதா விவகாரத்து விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விமர்சித்தார்.

இந்நிலையில், த.வெ.க.,விலிருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: எங்கள் பாரம்பரியத்தை சேர்ந்த வேலு நாச்சியாரை, கொள்கை தலைவராக, விஜய் அறிவித்ததால், த.வெ.க.,வில் இணைந்தேன். ஆனால், த.வெ.க.,வில் பெண்கள் புறக்கணிப்பு, அவமரியாதை தொடர்கிறது.

மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், விஜய், அவரது கட்சி நிர்வாகிகள் ஓடி ஒளிவர். மேடை பேச்சுக்கு நான்கு பேர் இருந்தால் போதும்; கட்சியை நடத்திவிடலாம் என, விஜய் கருதுகிறார். பொறுப்போடு நடந்து கொள்வதுதான் அரசியல்.

விஜய் அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை போய்விட்டது. தமிழக மக்களை ஏமாற்றதான் த.வெ.க., அரசியல் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link