சென்னை: ”கீழடியில் 2,400 ஆண்டுகள் பழமையான ஒரு உறை கிணறு உள்ளது. அதன் வாயிலாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீர் மறுசுழற்சியை நம் முன்னோர் செய்திருப்பது பெருமை மிகு விஷயம். எனவே, தண்ணீரை நாம் வீணடிக்கக் கூடாது,” என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக, ‘நீர் எழில் பள்ளி’ திட்ட தொடக்க விழா, சென்னை, எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.இந்த விழாவில் பங்கேற்ற, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
ஆய்வகத்திலேயே வசிப்பிடமாக இருந்த காலம் மலையேறி விட்டது. இனி, நம் வசிப்பிடத்தையே ஆய்வகமாக பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டது.அதாவது, வாழ்க்கையில் நம் அன்றாட நிகழ்வுகளை கவனித்தல் வேண்டும். ஒரு தோட்டத்திற்கு செல்கிறோம் எனில், கீழே இலை விழுந்திருக்கும். அதை சருகு என நினைத்து, தாண்டி செல்வது அல்ல வாழ்க்கை.
எல்லாம் இலை தான். ஆனால், ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு வடிவில் இருக்கும். அவற்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்படி பட்டாம் பூச்சிகள், நீர் நிலைகள், விலங்குகள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். பூமியில் இவ்வளவும் வாழ்வதற்கு அடிப்படையில் நீர் தேவை. நம் பள்ளி இனி ‘நீர் எழில் பள்ளி’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு தாயைப் போல் தான் இந்த பூமி தாயும். அந்த பூமி தாய் நமக்கு தரக்கூடிய பால் தான் தண்ணீர். தாய்ப்பாலுக்கு சமமான தண்ணீரை, ஒரு சொட்டுகூட வீணாக்கக் கூடாது.கீழடியில் 2,400 ஆண்டுகள் பழமையான, ஒரு உறை கிணறு உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீர் மறுசுழற்சியை நம் முன்னோர் செய்திருப்பது பெருமை மிகு விஷயம். எனவே, தண்ணீரை நாம் வீணடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
