பா.ஜ., கூட்டணியில் இணைகிறாரா சரத் பவார்? டில்லியில் பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு!

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் பிரிவின் தலைவர் சரத் பவார், அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர், பிரதமர் மோடியை டில்லியில் நேற்று சந்தித்தனர். இதன் மூலம், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சரத் பவார் அணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சரத் பவாரால், 1999ல் தொடங்கப்பட்ட கட்சி தேசியவாத காங்கிரஸ். அம்மாநில அரசியலில் முக்கிய கட்சியாக இன்றைக்கும் செயல்படுகிறது.

விபத்து சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார், கடந்த 2023, ஜூலையில், 41 எம்.எல்.ஏ.,க்களுடன் தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று, பா.ஜ., – சிவசேனா அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணியில் சேர்ந்தார்.

இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து, சரத் சந்திர பவார் என ஒரு அணியும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என மற்றொரு அணியாகவும் பிரிந்தது.

மீண்டும் கட்சியை ஒன்று சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்த நிலையில், கடந்த ஜனவரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகிழ்ச்சி சமீபத்தில், சரத் பவார் அணியை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பிரபுல் ப டேல், சுனில் தட்கரே ஆகியோர் மஹாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸை சந்தித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து, சரத் பவார் – அஜித் பவார் அணிகள் ஒன்று சேரலாம் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணையலாம் என்றும் பேசப்பட்டது.

எனினும், இது நிர்வாக ரீதியான சந்திப்பு எனக்கூறி, அப்போது எழுந்த அரசியல் ஊகங்களுக்கு சரத் பவார் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, சரத் சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் பிரிவின் தலைவர் சரத் பவார், கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே இருவரும் நேற்று சந்தித்து பேசிஉள்ளனர்.

சரத் பவாரை பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் கையைபிடித்து, தன் அறைக்கு அழைத்துச் செல்வதும், அங்கு இருவரும் சிரித்துப் பேசிக் கொள்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சரத் பவார் அணியில் உள்ள பெரும்பாலான எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., கூட்டணிக்குள் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் மத்தியிலும், மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஆட்சியில் பங்கு கிடைப்பதுடன், அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

ஆதரவு இதற்காக சரத் பவார் – அஜித் பவார் அணிகள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

ஒருவேளை இணைப்பு சாத்தியமாகாவிட்டால், தனியாகவே பா.ஜ., கூட்டணியில் சேரலாம் அல்லது கூட்டணிக்கு வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, சரத் பவார் அணியில் உள்ள எட்டு லோக்சபா எம்.பி.,க்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., துணையுடன், இந்த கூட்டத் தொடரிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.,வும் தீவிரமாக காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அதற்காகவே, பிரதமர் மோடி – சரத் பவார் இடையிலான சந்திப்பு நடந்து இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக, இறுதி முடிவு எடுக்க ஓரிரு வாரங்கள் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link