சென்னை: தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி

சென்னை: தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை, ஒதுக்குமாறு கேட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், வி.சி., ஆறு தொகுதிகளை பெற்று, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வென்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.

எனவே, இந்த சட்டசபை தேர்தலில், ஒரு லோக்சபா தொகுதிக்கு ஆறு சட்டசபை தொகுதிகள் அடிப்படையில், 12 தொகுதிகளை ஒதுக்கும்படி, தி.மு.க., தலைமையிடம், வி.சி., கேட்டது. ஆனால், ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்க தி.மு.க., முன் வந்தது. அதற்கு வி.சி., ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் எட்டு, புதுச்சேரியில் இரண்டு என, 10 தொகுதிகள் ஒதுக்குமாறு வி.சி., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும், தங்கள் கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தது. இதை தி.மு.க., தரப்பில் ஏற்கவில்லை.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை, ஒதுக்குமாறு கேட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Source link