போலீஸ் துன்புறுத்தலாம் என அச்சம்: செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

சென்னை: சோதனை, விசாரணை என்ற பெயரில், தங்களை துன்புறுத்தக் கூடாது என, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க., – எம்.எல்.ஏ., இளையராஜாவிடம், குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எங்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டி உள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். ஏதேனும் ஒரு வழக்கில், எங்களை கைது செய்ய, காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என, நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையையும் தடுக்கவில்லை.

காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால், சட்டப்படி முறையாக நோட்டீஸ் அனுப்ப, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில், எங்களை துன்புறுத்தக் கூடாது என, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘குதிரை பேர வழக்கில், முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து, முன் ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link