2047ல் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக இருக்கும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை: ‘‘ நம் நாடு, வரும் 2047-ல் வளர்ந்த தேசமாகவும், உலகிற்கே மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கும்,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

கோவை குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம்., செவிலியர் கல்லுாரியின் புதிய வளாகத்தை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசியதாவது:

தேசிய அளவில் செவிலியர் கல்லுாரிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேருகின்றனர். இது, மக்களிடையே ஆரோக்கியம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை காட்டுகிறது.

உடலுறுப்பு தானம் என்பது இன்று மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. நாம் மற்றவருக்கு தானமாக கொடுக்கும் உறுப்புகளை, அவர்கள் பயன்படுத்தும்போது அவர்களது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடையும்.

நாடு முழுக்க கண் டாக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி அளித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.

நம் நாடு மருத்துவத் துறையில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. வரும் 2047-ல், ஒரு வளர்ந்த தேசமாகவும், உலகிற்கே மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கும்; மருத்துவத் துறையில் மிகப்பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் கோபிநாத் வரவேற்றார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், அறக்கட்டளை துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம்., மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி ஆகியோர் பேசினர். டாக்டர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Source link