' த.வெ.க., ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்'

பெரம்பலுார்: ”த.வெ.க., ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்,” என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.

பெரம்பலுாரில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கடந்த கால ஆட்சி எப்படியோ? அப்படித்தான் தற்போதைய ஆட்சியும் நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையை மறு பரிசீலனை செய்ய நேரிடும்.

தமிழகத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள் அமைப்பினர், காவல்துறை மற்றும் தமிழகஅரசால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளாகிய நாங்கள் த.வெ.க., அரசுக்கு வெளியே இருந்து தான் ஆதரவு அளித்து வருகிறோம். இந்த ஆட்சிக்கு ஆதரவளித்த ஒரே காரணம், மதவாத பா.ஜ., ஆதரவோடு இங்கு ஆட்சி அமையக்கூடாது என்ற ஒரே காரணம் தான்.

த.வெ.க., ஆட்சி ஏழை, எளிய மக்களின் நலனை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் எங்களது நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்.

டில்லி மற்றும் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

சென்னையில், ஜனநாயக முறையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது அடக்குமுறையை காவல்துறையும், தமிழக அரசும் ஏவுவது கண்டனத்துக்குரியது.

நாங்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தான் அளித்துள்ளோம், இதே நிலை நீடித்தால், இந்த ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு குறித்த நிலைப்பாடு பற்றி மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link