குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக எல்.கே. சுதீஷ் , மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து விளக்கம் கோரினார்.
இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பதிலளிக்கையில், குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைத்தலை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முக்கியத் திட்டமாக மிஷன் வாத்சல்யா செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திட்டத்தின் செயல்பாடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஆய்வுக் கூட்டங்கள், திட்ட ஒப்புதல் வாரிய (PAB) கூட்டங்கள், கள ஆய்வுகள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்கள்; மாநிலங்களின் பொறுப்பு என்ன?
சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் படி அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தைகள் மீளிணைப்பு மற்றும் மறுவாழ்வுக்கான நடைமுறைகள் சட்டத்தில் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட பராமரிப்பு திட்டத்தின் அடிப்படையில் குடும்பம், தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு அல்லது பிற ஆதரவு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு வழங்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் நலக் குழுக்கள் (CWC), சிறார் நீதி வாரியங்கள் (JJB), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் (DCPU), மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்கள் (SCPS), மாநில தத்தெடுப்பு வள அமைப்புகள் (SARA) மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருவதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்புவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் AI தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது?
தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் (ITS), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு வசதிகள் தொடர்பாகவும் எல்.கே. சுதீஷ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி பதிலளிக்கையில், சாலை விபத்துகளை குறைத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (ATMS) தேசிய நெடுஞ்சாலைகளில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
tvk gilli sarath அமைச்சரின் சர்ச்சை வீடியோ…அரசியல் செய்வது யார்?
இதன் கீழ் AI அடிப்படையிலான வீடியோ சம்பவக் கண்டறிதல் அமைப்புகள் (VIDES), தானியங்கி வாகன பதிவு எண் அடையாளக் கேமராக்கள் (ANPR), PTZ கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிகழ்நேர போக்குவரத்து கண்காணிப்பு, விதிமீறல்களை கண்டறிதல், விபத்துகளை உடனடியாக அறிதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
52,647 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ATMS விரிவாக்கம்
தற்போது பெங்களூரு–மைசூரு, துவாரகா எக்ஸ்பிரஸ்வே, லக்னோ ரிங் ரோடு, UER-II மற்றும் டெல்லி–ஆக்ரா உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ATMS திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாடு முழுவதும் 4 வழிச்சாலை மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் என சுமார் 52,647 கிலோமீட்டர் தூரத்திற்கு ATMS அமைப்புகளை கட்டம் கட்டமாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக உள்ளூர், மண்டல மற்றும் தேசிய கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மென்பொருள் தளத்தின் மூலம் விபத்து மேலாண்மை, போக்குவரத்து பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய பிரச்சினைகளுக்கு விளக்கம் கோரிய எல்.கே. சுதீஷ்
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வை உறுதி செய்வது மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்களைப் பெறும் நோக்கில் இந்த இரண்டு முக்கிய கேள்விகளையும் மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ் எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில்கள் மூலம் இரண்டு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வெளியாகியுள்ளன.
Source link
