திருப்பூர்: ஜவுளிதுறையின் மூலப்பொருள் தேவை யை கருத்தில் கொண்டு, மத்திய பருத்தி ஆலோசனை குழு வரும் 28ம் தேதி கூடுகிறது.
மத்திய ஜவுளித்துறை கமிஷனர் தலைமையிலான ஆலோசனை குழுவில், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், பஞ்சு விவசாயிகள், வியாபாரிகள், ஜவுளி தொழில்துறை பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும் இக்குழு, பருத்தி உற்பத்தி, சந்தை நிலவரம், தொழில்துறை தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி வரு கிறது.
கடந்த, 2025 அக்., முதல் 2026 செப்., வரையிலான நடப்பு பருத்தி ஆண்டில் சாகுபடி பரப்பு அதிகரித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு பஞ்சு விளைச்சல் கிடைக்கவில்லை.
மேலும், இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) கொள்முதல் செய்த பஞ்சையும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து முடித்துள்ளதால், வரும் மாதங்களில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் தாக்கமாக, நாடு முழுதும் தினசரி பஞ்சு வரத்து, 5,000 பேல்களுக்கும் கீழ் சரிந்துள்ளதுடன், பஞ்சு விலையும் உயர தொடங்கியுள்ளது.
தற்போது அமலில் உள்ள பஞ்சு இறக்குமதி வரிவிலக்கு சலுகை, வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதை டிச.,31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
