மாணவரின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் பாஜ அரசு உறுதி; ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

புதுடில்லி: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் மோடி தலைமையிலான பாஜ அரசு நிபந்தனையின்றி உறுதியுடன் உள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

இது குறித்து பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பாஜ தலைமையிலான மோடி அரசு நிபந்தனையின்றி உறுதியுடன் உள்ளது. வினாத்தாள் கசிவு நிகழ்ந்ததை அறிந்த சில நாட்களிலேயே, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அரசு மறு-நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தியது.

இதன் மூலம், லட்சக்கணக்கான கடின உழைப்பாளிகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே போட்டியிட நியாயமான மற்றும் வெளிப்படையான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்தது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா ஆகியோர், இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதத்திற்கு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தவறான தகவல்களைப் பரப்புவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மட்டுமே மாணவர்கள் தொடர்பான ஒரு பிரச்னையை அரசியல்மயமாக்குவது மிகவும் கவலையளிக்கிறது. பாஜ ஆட்சியில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்ததாக அவர் கூறுகிறார், ஆனால் இந்த எண்ணிக்கையை அவர் எங்கிருந்து பெற்றார்? இளைஞர்களின் பெயரில் இத்தகைய தவறான தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் பரப்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

Source link