கேரளாவில் வெளியானது ஜனநாயகன்… ரசிகர்களை 'வைப்' செய்ய வைத்த முதல் காட்சி!

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இன்று அதிகாலை 6 மணிக்கே வெளியானது. தமிழக ரசிகர்கள் கேரளா மற்றும் கர்நாடகா எல்லைகளில் அமைந்துள்ள தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன், அவர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தடைபட்டது.

நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்ற 75 நாட்களுக்குப் பிறகு, தற்போது இந்தப் படம் வெளியாகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனநாயகன் திரைப்படம், தமிழகத்தில் 1000 திரைகளிலும், இந்தியா முழுக்க 3,000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லாத காரணத்தால் படம் 9 மணிக்கு வெளியாக இருக்கிறது. ஆனால், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் வெளியாகி விட்டன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், தமிழகம் – கேரளாவின் எல்லையான பாலக்காடுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி, படத்தை வரவேற்றுள்ளனர்.

ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி.ஜோசப் விஜய் நடிக்கும் என பெயர் வருகிறது. அதுமட்டுமில்லாமல், சட்டசபையில் திமுகவை கிண்டல் செய்யும் விதமாக, முதல்வர் விஜய் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ஜனநாயகன் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

Source link