ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்க வேண்டும். அந்த வலிமையான வில்லனை ஹீரோ எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பாலிவுட் வில்லன்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஜன நாயகன் பட வில்லன் பாபி தியோல் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
தென்னிந்திய சினிமாவில் ஹீரோயிசத்திற்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு படத்தின் கதையே ஹீரோவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ரசிகர்களும் தங்கள் விருப்பமான ஹீரோக்களை திரையிலும், திரைக்கு வெளியிலும் கொண்டாடும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் வலுவாக உள்ளது. அந்த ஹீரோவின் வெற்றியை இன்னும் பிரமாண்டமாக காட்ட, அவருக்கு இணையான சக்திவாய்ந்த வில்லன் தேவைப்படுவார். இதுவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் இந்தி நடிகர்கள் அதிகளவில் வில்லன்களாக தேர்வு செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் என்று நடிகர் பாபி தியோல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய பாபி தியோல், “தென்னிந்திய சினிமா ஒரு தனி உலகம். அங்கு ஹீரோக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதமே வேறுபட்டது. அதனால் அவர்களுக்கு எதிராக நிற்கும் வில்லனாக பெரும்பாலும் இந்தி நடிகர்களையே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். உண்மையில் இது புதிய நடைமுறை அல்ல. 1990-களிலிருந்தே ரஜினிகாந், கமல்ஹாசன், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது பாபி தியோலுடன், சஞ்சய் தத், சோனு சூத், ஆகியோரும் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக தேடப்படும் வில்லனாக பாபி தியோல் மாறியுள்ளார். 2023-ல் வெளியான அனிமல் திரைப்படம் அவரது திரைப்பயணத்திற்கு புதிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தென்னிந்திய படங்களிலிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.
சூர்யாவின் கங்குவா, தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் டாக்கு மகாராஜ், பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு, படத்தில் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த அனுபவங்களை நினைவுகூர்ந்த பாபி தியோல், “என்னுடன் நடித்த பலர் பின்னர் அரசியலுக்கு சென்று மிகப்பெரிய பதவிகளை அடைந்துள்ளனர். இது ஒரு வித்தியாசமான சம்பவம் போல இருக்கிறது,” என்று சிரித்தபடி கூறினார்.
மேலும் விஜய் குறித்து பேசிய அவர், “விஜயுடன் அதிகமாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மிகவும் அமைதியானவர். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு நாள் சேர்ந்து நடித்த ஒருவர், அடுத்த நாள் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதை பார்க்கும் அனுபவம் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.
அதேபோல் சூர்யாவைப் பற்றி, “அவருடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது,” என்று பாராட்டினார். பவன் கல்யாண் குறித்தும், “அவரும் மிகவும் அமைதியானவர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அவர் அரசியலிலும் முக்கிய பொறுப்பை ஏற்றார்,” என்று தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவின் மாஸ் இமேஜை மேலும் உயர்த்தும் வகையில் பாலிவுட் நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைக்கும் இந்த நடைமுறை, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக தொடர்கிறது.
