முதல் நாள் இரவு விஜய் குறித்து விமர்சனம், அடுத்த நாள் ஜன நாயகன் ஷூட்டிங்; பிரகாஷ் ராஜ் ரியாக்ஷன் என்ன?

தமிழ் திரையுலகில் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசும் நடிகர்களில் முக்கியமானவர் பிரகாஷ் ராஜ். தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சமூக பிரச்சினைகள் குறித்து மௌனம் காக்கும் திரையுலகினரையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் பிரகாஷ் ராஜ் பலமுறை தனது கருத்துகளை வெளிப்படையாக கூறியுள்ளார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, விஜயின் அரசியல் வருகை குறித்து கடுமையாக விமர்சித்த பிரகாஷ்ராஜ், அடுத்த நாளே ஜன நாயகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இருப்பினும், அந்த கருத்து வேறுபாடுகள் இருவரின் தனிப்பட்ட நட்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என ‘ஜன நாயகன்’ திரைப்பட இயக்குநர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.

விமர்சனத்துக்கு மறுநாள் படப்பிடிப்பு

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எச்.வினோத், படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ஒரு நாள் இரவு பிரகாஷ் ராஜ், விஜயின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு மறுநாளே இருவரும் ஒன்றாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே ஏதேனும் சங்கடம் இருக்குமோ, அது படப்பிடிப்பை பாதிக்குமோ என்று கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடந்தது அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.

“செல்லம்” என்று அழைத்த பிரகாஷ் ராஜ்

படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தவுடன், விஜயும் பிரகாஷ் ராஜும் நீண்ட நாள் நண்பர்களைப் போல சிரித்துப் பேசத் தொடங்கினர். வழக்கம்போல் விஜயை “செல்லம்” என்று அழைத்த பிரகாஷ்ராஜ் அன்புடன் பேசியதும் அவரை ஆச்சரியமாக இருந்தது. “அரசியல் வேறு… சினிமா வேறு… அதை அவர்கள் இருவரும் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நல்ல விமர்சனமாக இருந்தால் விஜய் அதை ஏற்றுக்கொள்வார். அதேபோல், விஜயின் நல்ல விஷயங்களையும் பிரகாஷ் ராஜ் மனதார பாராட்டுவார்,” என்று எச். வினோத் கூறியுள்ளார்.

‘செல்லம்’ என்ற வார்த்தையின் பின்னணி

2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ் கேரக்டர் திரிஷாவை “செல்லம்” என்று அழைக்கும் விதம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த வசனம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பிறகு பிரகாஷ் ராஜ், விஜயையும் அன்புடன் “செல்லம்” என்று அழைக்கும் பழக்கத்தை தொடர்ந்துள்ளதாக வினோத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைந்த விஜய் – பிரகாஷ் ராஜ் கூட்டணி

‘கில்லி’, ‘சிவகாசி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘வாரிசு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணைந்து நடித்த விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ், தற்போது ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் ஒன்றாக இணைந்துள்ளனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜயின் அரசியல் குறித்து பிரகாஷ் ராஜ் கூறியது

நட்பில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும், விஜயின் அரசியல் பயணம் குறித்து பிரகாஷ் ராஜ் முன்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பேசிய அவர், “மக்கள் உங்கள் நடிப்பை நேசித்தார்கள்; அந்த அன்பை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. தமிழகம், தமிழ் மொழி மற்றும் மக்களின் உரிமைக்காக இதுவரை என்ன செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இருப்பினும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக தொடரும் நட்பையும் தொழில்முறை மரியாதையையும் விஜயும் பிரகாஷ் ராஜும் இன்று வரை பேணிவருவது, திரையுலகில் பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

Source link