பிரஸ்ஸல்ஸ்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
கடந்த 28 ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. எரிவாயு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் பங்கேற்ற பிறகு ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் துவக்கிய இந்தபோர் கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. இதனால், அப்பாவி மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போர் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகள், போர்க்களத்தை தாண்டி, பரவி விருகிறது. உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு பேரழிவை விளைவுகளை உண்டாக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். போரை காட்டிலும், தூதரக ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார் .
