காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் அரசாணை வெளியீடு

சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை, ‘பெ ருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என, தமிழக அரசு மாற்றியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள, 1,545 அரசு துவக்க பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும், 1 .45 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும், இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வாயிலாக, 19.34 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை, 6 முதல் 8ம் வகுப்பு வரை, செப்டம்பர் 17ம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன் பெறுவர்.

முதல்வரின் காலை உணவு திட்டம் என, அழைக்கப்பட்டு வந்த அதன் பெயரும் மாற்றப்பட்டு உள்ளது. இனி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என அழைக்கப்படும்.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு, 343 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. நடப்பு 2026 – 27ம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு, 217 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, சமூக நலத் துறை செயலர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார்.

Source link