சென்னையை சேர்ந்த நபரிடம் அரிய வகை ஆமைகள் பறிமுதல்; வனவிலங்கு கடத்தலை கொல்கத்தா சுங்க அதிகாரிகள் தடுத்தது எப்படி?

எழுதியவர்: ஸ்வீட்டி குமாரி

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த சென்னையை சேர்ந்த பயணியிடம் இருந்து 707 உயிருடன் இருந்த ‘ரெட்-இயர்டு ஸ்லைடர்’ (Red-eared Slider) ஆமைகள் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வனவிலங்கு கடத்தல் முயற்சியை தடுத்துள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

சுங்கத்துறையின் விமான நுண்ணறிவு பிரிவு (Air Intelligence Unit) அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அந்த பயணியை கிரீன் சேனலை (Green Channel) கடந்த பிறகு சோதனை செய்தனர். அப்போது அவரது செக்-இன் பயண லக்கேஜ்களை விரிவாக ஆய்வு செய்ததில், எந்தவித உரிமம் அல்லது அனுமதியும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 707 உயிருள்ள ரெட்-இயர்டு ஸ்லைடர் ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பயணி இண்டிகோ விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தேவையான எந்த சட்டப்பூர்வ ஆவணங்களையும் பயணி சமர்ப்பிக்கத் தவறியதால், அவை சுங்கச் சட்டம், 1962, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972, மற்றும் அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த பயணி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தலுக்குப் பின்னால் செயல்பட்ட வலையமைப்பை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ரெட்-இயர்டு ஸ்லைடர் என்பது அமெரிக்காவின் தென் பகுதிகள் மற்றும் வடக்கு மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட அரை நீர்வாழ் ஆமை இனமாகும். உலகின் பல நாடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டாலும், இது அந்நாட்டு இயற்கை சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய ஆக்கிரமிப்பு வெளிநாட்டு உயிரினமாக கருதப்படுகிறது.

தகவல்களின்படி, அரிய விலங்குகள் மற்றும் பறவைகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கான முக்கிய இடைநிலை மையமாக தாய்லாந்து இருந்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் சில அனுமதியற்ற செல்லப்பிராணி சந்தைகள் மற்றும் ஆன்லைன் குழுக்களில், ஒரு ரெட்-இயர்டு ஸ்லைடர் ஆமைக்குட்டி ரூ800 முதல் ரூ1,500 வரை விற்கப்படுகிறது. பெரிய அளவிலான ஆமைகள் அல்லது ஜோடிகளின் விலை ரூ2,000 முதல் ரூ5,000 வரை உயர்கிறது.

இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் விநாயக் ஆசாத் கூறுகையில், “வனவிலங்கு கடத்தலுக்கு எதிராக சுங்கத்துறை ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையையே கடைப்பிடிக்கிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம், நாட்டிற்குள் அரிய உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தும் கும்பல்கள் இன்னும் செயல்பட்டு வருவதையும், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை சுங்கத்துறை மேலும் தீவிரப்படுத்தி வருவதையும் வெளிப்படுத்தியுள்ளது.

Source link