இந்நிலையில் இது தொடர்பாகப் பிரபல ஆங்கில நாளேட்டில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதனைக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வில் உள்ள சிக்கல் என்பது எப்போதும் நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு சார்ந்தது. சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை மெய்ப்பித்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டங்கள் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தோல்வியடைந்துள்ளது என்பதை மாநிலங்கள் நம்ப வேண்டிய நேரம் இது. மத்திய அரசு மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. முதலாவதாக, இது பல நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைக்கும். இரண்டாவதாக, இது மருத்துவ சேர்க்கையில் நிலவும் கேபிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கலை ஒழிக்கும். மூன்றாவதாக, தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் நுழைவதை உறுதி செய்வதன் மூலம் தரத்தை மேம்படுத்தி, சிறந்த மருத்துவர்களை உருவாக்கும். இந்த ஒவ்வொரு கணக்கிலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது. இது சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றல் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது.
தகுதி என்பது இப்போது தொடர்ச்சியான கல்வித் திறனால் அளவிடப்படுவதில்லை; மாறாக, பயிற்சி மையங்கள் கற்பிக்கும் தேர்வு உத்திகளைத் தேர்ச்சி பெறும் திறனை வைத்தே அளவிடப்படுகிறது.நீட் என்பது தகுதி அடிப்படையிலானது அல்ல; அது சலுகைகளைப் பொதுமைப்படுத்தியது. விலை உயர்ந்த கோச்சிங் கிளாஸ் கட்டணங்களைச் செலுத்தக்கூடியவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு பெருமளவில் பயனளிக்கிறது. அதே நேரத்தில் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மாநில பாடத்திட்டம் மற்றும் பிராந்திய மொழிகளில் படிப்பவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு இந்த கவலைகளை ஆரம்பத்திலேயே உணர்ந்துகொண்டது. இதனால், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவைத் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். சேர்க்கையில் பன்முகத்தன்மை இருப்பதால் தரம் குறைந்துவிடாது; அது சமத்துவத்தையும் சிறப்பையும் பலப்படுத்தும். மத்திய அரசு சீரான தன்மையை மட்டுமே குறிக்கோளாகக் கருதாமல், திறந்த மனதுடன் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக மத்தியமாக்கல் தேவையில்லை. மாறாக, அதன் மாநிலங்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.
