நீட் தேர்வு எதிர்ப்பு: மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை ஆலியா பட்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ‘ஆலியா பட்’ மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

மனவேதனையும் நம்பிக்கையும்:

“கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் என் இதயத்தை உடைத்து நொறுக்கியுள்ளன. ஆனால் அதே வேளையில், மாணவர்களின் மனஉறுதியைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.” தனக்கான உரிமைகளுக்காகக் களத்தில் போராடும் ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் பெரிய நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்களின் பயணம் அடங்கியுள்ளது.”

எதிர்கால தலைமுறைக்கான குரல்:

“அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை; தங்களை ஆதரிக்கும் அனைவருக்காகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் தலைமுறைக்கு ஒரு நல்ல பாதையை உருவாக்குவதற்காகவும் போராடுகிறார்கள். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றன.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இந்த இளைஞர்களின் குரலுக்கு நாம் உண்மையிலேயே செவிசாய்க்கிறோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக “மாணவர்களுக்காக… மாணவர்களால்… எதிர்காலம் அவர்களுக்குரியது! ஜெய் ஹிந்த்!” என நெகிழ்ச்யியுடன் பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சல்மான் கான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏற்கெனவே மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆலியா பட்டின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.

Source link