“இது குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்”

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் அருணாச்சலம் (வயது 26) என்ற இளைஞர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த 17ஆம் தேதி மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்து 120 முதல் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அருணாசலத்தை காவல்துறையினர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் 

இத்தகைய சூழலில் தான், கடந்த 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில், தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று (23.07.2026) காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் காவல்துறையினர் அடித்ததால் தான், அருணாச்சலத்திற்குத் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே, இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும். இல்லை என்றால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். மேலும் அருணாச்சலத்தைக் காவலர்கள் நான்கு பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்று, அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த நான்கு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனர். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!.நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link