சிட்னி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது ஜப்பான். அரையிறுதியில் 4-1 என தென் கொரியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 3 போட்டியிலும் தோற்று வெளியேறியது. நேற்று சிட்னியில் நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியாவை எதிர்கொண்டது.
ஜப்பான் அணிக்கு, 15 வது நிமிடத்தில் ரிகோ முதல் கோல் அடித்தார். 25 வது நிமிடம் ஹமானோ, 75வது நிமிடம் குமகய் தலா ஒரு கோல் அடிக்க, ஜப்பான் 3-0 என ஆதிக்கம் செலுத்தியது.
தென் கொரியா தரப்பில் காங் சாயே ரிம் (78) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். தொடர்ந்து ஜப்பானின் சிபா (81) ஒரு கோல் அடித்து அசத்தினார். முடிவில் ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. மார்ச் 21ல் சிட்னியில் நடக்க உள்ள பைனலில் ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
