“இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?”

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 26) என்ற இளைஞர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்தார். அதன்படி கடந்த 17ஆம் தேதி (17.07.2026) மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்து 120 முதல் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அருணாசலத்தை காவல்துறையினர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் 

இத்தகைய சூழலில் தான், கடந்த 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில், தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று (23.07.2026) காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள், “காவல்துறையினர் அடித்ததால் தான், அருணாச்சலத்திற்குத் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே, இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும். இல்லை என்றால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர். மேலும் அருணாச்சலத்தைக் காவலர்கள் நான்கு பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்று, அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த நான்கு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனர். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Source link