– நமது சிறப்பு நிருபர் -'நாடு முழுதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தும், 'ஒரே நாடு;

– நமது சிறப்பு நிருபர் –

‘நாடு முழுதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்தும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால், தேர்தல் பணியாளர்களின் தேவை, 26 லட்சம் பேர் அளவுக்கு குறையும்’ என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில், 1951 – 52, 1957, 1962, 1967ல் மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. பின், மாநில சட்டசபைகள் அடிக்கடி கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நின்று போனது.

தேர்தல் பணியாளர்கள்

இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம், 2018ல் சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 2024ல் இது தொடர்பாக அறிக்கை அளித்தது.

தொடர்ந்து 2024 டிசம்பரில் இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு பார்லிமென்ட் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு, அதன் பிரிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தாக்கம் குறித்து ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன் விபரம்:

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் அமலானால், ஐந்து ஆண்டு தேர்தல் சுழற்சியில் தேர்தல் பணியாளர்களின் தேவை 26 லட்சம் பேர் அளவுக்கு குறையும். இது, கடந்த 2024ல் நிறுவப்பட்ட 10.51 லட்சம் ஓட்டுச்சாவடிகளை கொண்டு கணக்கிடப்பட்டது. கணக்கீட்டில் பாதுகாப்பு பணியாளர்களான துணை ராணுவத்தினர், போலீசாரை சேர்க்கவில்லை.

தேர்தல் பணியாளர் தேவையைப் பொறுத்தவரை, சட்டசபை தேர்தலுக்கு ஒரு தலைமை அதிகாரி மற்றும் மூன்று ஓட்டுச்சாவடி அதிகாரிகள்; லோக்சபா தேர்தலுக்கு ஒரு தலைமை அதிகாரி மற்றும் நான்கு ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.

பள்ளி ஆசிரியர்கள்

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தனித்தனியாக நடத்தப்பட்டால் மொத்தம் ஒன்பது பணியாளர்கள் தேவைப்படுவர். ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் ஒரு தலைமை அதிகாரி மற்றும் ஐந்து அதிகாரிகள் என ஆறு பேரே போதுமானது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக 33 சதவீத பணியாளர் குறைப்பு சாத்தியம்.

தேர்தல் பணிகளில் பெரும்பாலும் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்; இதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு அதிகம்.

மின்னணு ஓட்டு இயந்திரம் தொடர்பான பயிற்சி, தேர்தல் நடைமுறை பயிற்சி என, இரண்டு விதமான பயிற்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும். அதன் பின் தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாளில் பணியாற்ற வேண்டும்.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால், 26 லட்சம் தேர்தல் பணியாளர்களின் நான்கு வேலை நாட்கள் அளவான 1.04 கோடி வேலை நாட்களை மிச்சப்படுத்த முடியும். இவ்வாறு ஆய்வுஅறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

Source link