2 புதிய உரங்கள் தயாரிக்க 'இப்கோ'வுக்கு மத்திய அரசு அனுமதி உர தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

புதுடில்லி :

உர தயாரிப்பு நிறுவனமான ‘இப்கோ’ உருவாக்கி உள்ள ‘நானோ என்.பி.கே.,’ திரவ உரம் மற்றும் குறுணை உரங்களை தயாரித்து விற்பனை செய்ய, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதன் வாயிலாக, விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்கோ, ஏற்கனவே நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி., உரங்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திரவ வடிவிலான நானோ என்.பி.கே., உரத்தையும், குறுணை வடிவிலான நானோ என்.பி.கே., உரத்தையும் தயாரித்து, விற்பனை செய்ய எப்.சி.ஓ., எனப்படும் உர கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளது.

இது குறித்து இப்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:

நானோ என்.பி.கே., திரவ உரம் இலைவழி ஊட்டத்துக்கும், குறுணை உரம் மண் மற்றும் வேர் வழி ஊட்டத்துக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய வகை உரங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும்.

இந்த உரங்களுக்கு அரசின் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கான சேவையில், முக்கிய திருப்பு முனையாகும்.

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உர வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உள்நாட்டு தயாரிப்புகள் நம் நாட்டின் இறக்குமதி தேவையை குறைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ரூ.600 கோடி ஒதுக்கீடு மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, எல்.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள 37 யூரியா தயாரிப்பு ஆலைகளின் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்க, கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் காரணமாக ஏராளமான இந்திய எல்.என்.ஜி., நிறுவனங்கள் தங்களது வருடாந்திர பராமரிப்புக்கான செயல்பாட்டு நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவித்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் நீடித்தால், உர ஆலைகளுக்கு கிடைக்கும் எல்.என்.ஜி., வினியோக அளவு பெருமளவு குறையக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆறு மாத கால சராசரி நுகர்வில், தற்போது கிட்டத்தட்ட 70 சதவீத எரிவாயு வினியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பதற்றம் தொடரும்பட்சத்தில், இது கிட்டத்தட்ட 60 அல்லது 50 சதவீதத்துக்கும் கீழ் குறைய வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உர தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான 65 சதவீத எல்.என்.ஜி., தேவையை நீண்ட கால கொள்முதல் வாயிலாக பெற்று வருகின்றனர். யூரியா உர தயாரிப்புக்கான மூலப்பொருள் செலவில் 80 சதவீதத்துக்கும் மேல் எரிவாயுவுக்கே செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source link