திண்டாட்டத்தில் மக்கள்.. கொண்டாடத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசு: இபிஎஸ் கடும் விளாசல் – eps says i strongly condemns the new nero government

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 70 வயது மூதாட்டியின் விரலை எலிகள் கடித்து தூண்டாக்கியதாக எழுந்துள்ள புகார்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மூதாட்டி அறுவை சிகிச்சைக்கு பின்பாக சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவருடைய விரலை எலிகள் கடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் காட்டமாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஒருவருடைய கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு இன்றைய ஆட்சி தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை எப்படி வைத்துள்ளது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என்ற விமர்சனத்தையும் இபிஎஸ் முன்வைத்துள்ளார்.

மேலும் அரசினை நம்பி தான் அப்பெண் சிகிச்சை பெறுவதற்கு வந்தார். அவரை எலி கடித்து கால் விரலை இழந்துள்ளார். அந்த பெண்ணிற்கு தவெக பொய்க்கால் குதிரை அரசு என்ன பதில் வைத்துள்ளது எனவும் கடும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி மக்கள் திண்டாடி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்துடைய முதல் காட்சியை பார்த்து கொண்டாடி செல்ஃபி பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

அவர் மட்டும் அல்லாமல் முதலவர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இன்றைய தினம் படம் பார்ப்பதற்கு “லீவு” போட்டுள்ளதாக வேறு செய்திகள் வருகின்றன. நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம் என தவெக அரசுக்கு எதிராக தன்னுடைய கடுமையான கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து அவருடைய பதிவில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கான இழப்பீடையும் இந்த அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சென்சார் காரணமாக வெளியீடு தொடர்ச்சியாக தள்ளிப்போன நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

விஜய்யின் கடைசிப்படம் என்பதால் தவெக அமைச்சர்கள் திரையரங்குகளில் இந்த படத்துடைய FDFS காட்சியை கண்டு ரசித்தனர். அப்போது அமைச்சர் முகமது பர்வேஸ் தியேட்டரில் கண் கலங்கி அழுத வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து தவெக அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து திரையரங்குகளில் அழுவதை போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

இதனிடையில் இப்படத்தினை பார்ப்பதற்காக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மூதாட்டி கால் விரலை எலிகள் கடித்து குதறிய விவகாரத்தில் தவெக அரசினை இபிஎஸ் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link