போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவு; அண்ணா ஹசாரே மௌனவிரதப் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் அமைதி வழியில் போராடி வரும் மாணவர்களை காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் உள்ளிட்ட தகாத செயல்பாடுகள் மூலமாகக் கலைக்க முயன்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதே நேரத்தில், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள இளம் பெண்களைத் தகாத முறையில் தொடுதல் மற்றும் கண்மூடித்தனமாக தாக்குதல் உள்ளிட்ட கொடூர சம்பவங்களிலும் காவல்துறையினர் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையே, போராட்டத்தைக் கலைக்கும் நோக்கில் பாஜக தங்களது அடியாட்களை இறக்கி, போராட்ட களத்தில் வன்முறையைத் தூண்டி வருவதாக அபிஜித் தீப்கே தெரிவித்திருந்தார். இதனிடையே, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் வலுத்துவரும் நிலையில், நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.   

இந்நிலையில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இரண்டு மணி நேரம் மௌன விரத போராட்டம் நடத்தினார். மராட்டிய மாநிலம், அஹில்யா நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே, அவர் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீது காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வரும் போக்கைக்  கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். அதில்,  ”மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறை என்பது வேதனையளிக்கிறது. மாணவர்களின் போராட்டத்தைச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்காமல், சமுதாயத்தின் வலி மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.   

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதால், இந்த அரசாங்கம் ஒன்றும் கவிழ்த்துவிடாது. மாறாக அது அரசாங்கத்தின் செயல்பாட்டைப் பொறுப்புடையதாகவும், திறன் மிக்கதாகவும் மாற்றும். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிச்சயமாக்கச் செவி கொடுத்துக் கேட்க வேண்டும். இதற்கு, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்வு காண வேண்டும் ” என்று தெரிவித்திருந்தார்.  

Source link