வாஷிங்டன்: ஈரானின் ஏவுகணை தாக்குதல் 90 சதவீதமும், ட்ரோன் தாக்குதல் 95 சதவீதமும் குறைந்துவிட்டதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ள நிலையில், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களால் ஈரான் பேரழிவு தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 28ம் தேதி துவங்கி, மூன்றாவது வாரமாக போர் தொடர்ந்து வருகிறது.
பரஸ்பரம் தாக்குதல் வலுவடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஈரானின் ஏவுகணை தாக்குதல் வேகம் துவக்கத்தில் இருந்ததை விட தற்போது 90 சதவீதமும், ட்ரோன்களின் தாக்குதல் 95 சதவீதம் குறைந்துஉள்ளது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
இனி அவர்களால் புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்ய முடியாது. இதேபோன்று, ஈரானின் கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஈரான் இப்போது தற்காப்பு இல்லாத நாடாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அரசு இவ்வாறு தெரிவித்தாலும், ராணுவ நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சில ஆபத்தான எச்சரிக்கைகளை முன்வைத்துஉள்ளனர்.
ஈரான் தன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முழுமையாக பயன்படுத்தாமல், ஒரு மிகப்பெரிய இறுதி தாக்குதலுக்காக நிலத்தடி சுரங்கங்களில் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துஉள்ளனர்.
ஒருவேளை ஈரான் தன் எஞ்சியிருக்கும் அனைத்து வலிமையையும் திரட்டி ஒரே நேரத்தில் ஏவினால், அது மேற்காசிய நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் உலக பொருளாதாரத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துஉள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஹெக்செத், “அமெரிக்கா எந்த வாய்ப்பையும் நழுவ விட தயாராக இல்லை. எந்தவொரு பதுக்கலையும் முன்கூட்டியே முறியடிக்கும் வகையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா வடிவமைத்து உ ள்ளது.
“இதன்படி, பதுக்கி வைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆயுதங்களும் அவை ஏவப்படுவதற்கு முன்பே சொந்த ஏவுதளங்களிலேயே புதைக்கப்படும்,” என கூறினார்.
