தூத்துக்குடி காவல் மரணத்தில் வாலிபர் அருணாச்சலம் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் மௌனம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறி வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அருணாச்சலம் மரணமடைந்த சம்பவத்தை முன்னிறுத்தி, தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் அரங்கேறிய கொடூரம்: அருணாச்சலத்தின் மரண வாக்குமூலம்
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம் என்பவர், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் அண்மையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் இறப்பதற்கு முன்னதாகப் பேசிய மரண வாக்குமூல வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “போலீசார் தன்னைத் தலையில் பலமாகத் தாக்கினர்” என்று அருணாச்சலம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ஆதாரம், காவல்துறையின் அத்துமீறலை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாகர்கோவில் சிறை மரணம் முதல் தூத்துக்குடி வரை:தொடரும் அவலம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன்புதான், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்தார்.அந்தச் சோகம் மற்றும் அதிர்ச்சி விலகுவதற்குள்ளாகவே, தற்போது தூத்துக்குடியில் அடுத்த காவல் மரணம் (Custodial Death) நிகழ்ந்துள்ளது.இத்தகைய சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
முதல்வர் ஜோசப் விஜய் மௌனம் காப்பது ஏன்? பாஜாக கேள்வி
தவெக அரசின் இந்த நிர்வாகத் திறமையின்மை குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது. @TVKPartyHQ ஆட்சிப் பொறுப்பேற்ற இந்தச் சில மாதங்களிலேயே காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளன. இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என்பதை முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
Source link
