ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தன்வி சர்மா முன்னேறினர்.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் மோதினர். அபாரமாக ஆடிய ஆயுஷ் 17-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 12-21, 10-21 என, டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹன்னேசனிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப், துருக்கியின் நெஸ்லிஹான் ஆரின் மோதினர். இதில் அசத்திய அன்மோல் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-18, 21-14 என, சீனதைபேயின் ஷுவோ யுன் சங்கை வீழ்த்தினார். இந்தியாவின் இஷாராணி 21-19, 21-19 என டென்மார்க்கின் அமாலியை தோற்கடித்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங் மோதினர். இதில் தன்வி 21-18, 14-12 என முன்னிலையில் இருந்த போது தாய்லாந்து வீராங்கனை காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து தன்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 9-21, 15-21 என, ஜப்பானின் மனாமி சுய்சூவிடம் தோல்வியடைந்தார். இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் 21-15, 14-21, 15-21 என, ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியிடம் வீழ்ந்தார்.
