நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்ற போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தனால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தரிலும் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி, ராகுல் வீட்டில் இருந்து காந்தி நினைவிடம் நோக்கி பேருந்து மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் சென்ற பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
