டெல்லியில் மாணவர்களைத் தாக்கியதை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.தமிழ்வளவன் தலைமை தாங்கினார். முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் வரவேற்றார். சிதம்பரம் நகரச் செயலாளர் ரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மண்டல நிர்வாகி செல்லப்பன், மாநில நிர்வாகிகள் பால. அறவாழி, செல்வமணி, கதிரவன், யாழ் திலீபன், நந்தினி, ராம் சுந்தர், புரட்சிக்கதிர், சரித்திரன், முகமது அய்யூப் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Source link