சென்னை : ‘சிதம்பரம் கோவிலில், மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதை, புராதன சின்ன ஆணைய குழு நேரில் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சிதம்பரம் நடராஜர் கோவிலில், மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், கோபுரங்களை சுற்றி பூங்கா அமைக்கப்படுகிறது. அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடலுாரை சேர்ந்த பக்தர் ராதா சார்பில், வழக்கறிஞர் சி.கனகராஜு ஆஜராகி, ”புராதன கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே, எவ்வித அனுமதியுமின்றி, 10 சதுர அடியில் ஒரு மண்டபம் கட்டியுள்ளனர். பரத நாட்டிய அரங்கை, கோ சாலையாகவும் மாற்றி உள்ளனர். நேரடியாக, நான் கோவிலை ஆய்வு செய்ததில், பக்தர்கள் பாதுகாப்பு சார்ந்த, பல்வேறு வசதிகளில் குறைபாடு உள்ளது; அதை நிவர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும்,” என, குற்றம் சாட்டினார்.
அப்போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ”எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று, ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம்,” என, தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குனர் நம்பிராஜன் தலைமையில், 14 உறுப்பினர்கள் கொண்ட புராதன சின்ன ஆணையத்தை அமைத்து, தமிழக அரசு, ஜூலை 16ல் உத்தரவு பிறப்பித்து உள்ளது. புராதன கோவில்கள், கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள், அனுமதி கோருதல் போன்ற விஷயங்களை, ஆணையம் கவனித்து கொள்ளும்.
‘சிதம்பரம் கோவிலில், மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதை, புராதன சின்ன ஆணைய குழு நேரில் ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக.27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அப்போது, புராதன சின்ன ஆணைய குழு ஆய்வுக்கு வருவதை, முன்னரே தெரியப்படுத்தும்படி, பொது தீட்சிதர்கள் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன், ”ஆய்வு செய்ய வருவது தொடர்பாக, முன்னரே தகவல் வழங்கப்படும்,” என்றார்.
