‘ஜனநாயகன்’ முதல்நாள் முதல் காட்சி: சினிமா எல்லைகளை தாண்டி நிற்கும் விஜய்யின் பிரியாவிடை

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்பது வெறும் கதையை மட்டும் நம்பி வெளிவருபவை அல்ல. அவை ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழா. கெத்தான மாஸ் வசனங்கள், அதிரடிப் பாடல்கள், பழைய நினைவுகள் என அனைத்து வெடிகளையும் ஒன்றாக கட்டிப் பிடிக்கும் கயிறாகத்தான் திரைக்கதை பயன்படுகிறது. இதை மிகக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு வெளிவந்திருக்கும் படம் தான் ‘ஜன நாயகன்’.

வெள்ளிக்கிழமை காலை முதல்நாள் முதல் காட்சிக்காக திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்கள், வெறும் விஜய்யின் கடைசிப் படத்தைப் பார்க்க மட்டும் வரவில்லை. தங்கள் நாயகன் ஆடுவதையும், பிரச்சாரம் செய்வதையும், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதையும், ஊழலை எதிர்த்து தலைமைச் செயலகத்திற்குள் கெத்தாக நடந்து செல்வதையும் தான் பார்த்தார்கள். சிறைச்சாலை, ஆப்ரிக்காவின் ‘சுவாஸ்னியா’ நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர், சர்வதேச ஆயுதக் கடத்தல், பயங்கரவாதம், ஊழல் அரசியல்வாதிகள் எனப் படம் முழுக்க சம்பவங்கள் தெறிக்கின்றன.

திரைக்கதைக்குள் ஒளிந்திருக்கும் சில சுவாரசிய அரசியல் மீம்கள்/விமர்சனங்கள்:

வேர்க்கடலை ‘ஊழல்’ தத்துவம்: அரசியல்வாதி ஒருவர் வழியில் வேர்க்கடலையைப் பறித்துத் தின்றுவிட்டு, செடியை அப்படியே திரும்ப நட்டு வை, கடலை போனால் யாரும் கேட்க மாட்டான், செடியே இல்லைனா கண்டுபிடிச்சிடுவான் என்கிறார். உடனே உதவியாளர், இவ்வளவு சூப்பரா யோசிக்கிறீங்களே, 10 வருஷமா ஏன் சி.எம் ஆகல? எனக் கேட்க, எங்களை ஜெயிக்க வைக்கும் அளவுக்கு மக்கள் இன்னும் புத்திசாலியா மாறல என அவர் கொடுக்கும் பதில் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

வாரிசு அரசியல் பஞ்ச்: வில்லன் கதாபாத்திரம், என் தாத்தா அரசியலில் இருந்தார், என் அப்பா இருந்தார், இப்போ நான் இருக்கேன் எனப் பேசும் போதே அரங்கத்தில் கைதட்டல்கள் பறக்கின்றன.

படத்தில் ‘தளபதி வெற்றி கொண்டான்’ ஆக வரும் விஜய், வெறும் ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் இல்லாமல் அன்பான சித்தப்பாவாகவும் மனதைத் தொடுகிறார். வன்முறையை பார்த்து பயந்து நடுங்கும் மமிதா பைஜூவை, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, புலிகளைப் போல வளரவேண்டியவர்கள் என ஊக்கப்படுத்துகிறார். படத்தின் க்ளைமேக்ஸில் மமிதா காட்டும் அதிரடி ஆக்சன் வேறரகம். அதுமட்டுமின்றி, பள்ளி விழாவில் குழந்தைகளிடம் பேசும் விஜய், “Good Touch, Bad Touch” பற்றியும், சொந்த உறவினராக இருந்தாலும் தவறான தொடுதலை எதிர்க்க வேண்டும் என்றும் பேசி பெண்களுக்கு தைரியம் ஊட்டுகிறார்.

படத்தில் ரசிகர்களை உறைய வைத்த சில நிஜ உலகச் சம்பவங்கள் மற்றும் சர்ப்ரைஸ் மனிதர்கள்; தமிழ்நாட்டில் மதக் கலவரம் வெடிக்கும் போது, மசூதியைத் தாக்க வரும் கும்பலிடம் இருந்து மசூதியைப் பாதுகாக்கும் இந்து குழுவிற்கு த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதைப் பார்க்கும் விஜய், அதான்டா தமிழ்நாடு என்று சொல்லும்போது தியேட்டர் அலைமோதுகிறது. எம்.ஜி.ஆரின் நான் ஆணையிட்டால் பாடல் பின்னணியில் ஒலிக்க, அவரது படத்திற்கு முன்னால் நின்று விஜய் சாட்டையால் ஊழல்வாதியைத் தண்டிக்கும் போது ரசிகர்கள் சீட்டைக் விட்டு எழுந்து ஆடத் தொடங்கிவிட்டனர். படத்தின் இறுதியில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களான அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களாக வந்து விஜய்யிடம் கேள்விகள் கேட்கும் காட்சி, தமிழ் சினிமா தன் நாயகனுக்குக் கொடுக்கும் உச்சகட்ட மரியாதையாக அமைந்தது.

இறுதியாக… ‘ஜன நாயகன்’ கச்சிதமான திரைக்கதை கொண்ட படமா என்றால் ‘இல்லை’. ஆனால், அது யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை. திரையில் பார்க்கும் ஒரு தலைவர், நிஜத்திலும் நாளை காலை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களின் மனதில் விதைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க விடைபெறல் படம் தான் இந்த ‘ஜன நாயகன்’.

Source link