தொடரை வென்றது இந்தியா: 'யூத்' டெஸ்டில் அசத்தல்

கொழும்பு: இரண்டாவது ‘யூத்’ டெஸ்டில் அசத்திய இந்திய அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 1-0 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஏமாற்றியது.

இலங்கை சென்ற இளம் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ‘யூத்’ டெஸ்ட் தொடரில் (19 வயது) பங்கேற்றது. முதல் போட்டி ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட், கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 411, இலங்கை 148 ரன் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்சில் 208/3 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின், 472 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 155/4 ரன் எடுத்திருந்தது. நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணிக்கு செனுஜா (64), கேப்டன் விமத் தின்சாரா (64) நம்பிக்கை தந்தனர். கவிஜா காமகே (36), சேத்மிகா (42) ஓரளவு கைகொடுத்தனர். ரோகித் யாதவ் ‘சுழலில்’ துல்னித் சிகேரா (15), ஜேசன் பெர்னாண்டோ (0), கிம்ஹான் மெண்டிஸ் (0) சிக்கினர்.

இலங்கை அணி 2வது இன்னிங்சில் 260 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ரோகித் யாதவ் 4, சிகுருபதி வெங்கடா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சமீபத்தில் ‘யூத்’ ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என இழந்தது. இதற்கு, டெஸ்ட் தொடரில் பதிலடி தந்தது.

Source link