வைபவ் 'மின்னல்' வேக அரைசதம் * 15 வயதில் புதிய சாதனை * இந்தியா எளிதான வெற்றி

ஹராரே: வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் அரைசதம் விளாச, முதல் ‘டி-20’ போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை எளிதாக வீழ்த்தியது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. தொடர்ந்து 8வது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா 24, அறிமுகம் ஆனார். ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரான், நியூமன் நியாம்ஹுரி அறிமுகம் ஆகினர்.

மயங்க் அபாரம்

ஜிம்பாப்வே அணிக்கு பென்னெட், பென் கர்ரான் ஜோடி துவக்கம் தந்தது. மறுபக்கம் இந்திய அணியின் இளம் ‘வேகங்கள்’ போட்டுத் தாக்கினர். முதல் பந்தை மயங்க் யாதவ், 149 கி.மீ., வேகத்தில் வீசினார். இதில் பென்னெட், இஷானிடம் ‘பிடி’ கொடுத்து ‘டக்’ அவுட்டானார். பிரின்ஸ் பந்தில் பென் கர்ரான் (10) அடித்த பந்தை வைபவ், கேட்ச் செய்தார்.

மீண்டும் வந்த மயங்க், இம்முறை மையர்சை (6) வெளியேற்றினார். கேப்டன் சிக்கந்தர் ராசா, 4 ரன் மட்டும் எடுத்து துபே பந்தில் அவுட்டானார். ஜிம்பாப்வே அணி 32/4 என திணறியது. பிஷ்னோய் சுழலில் ரியான் பர்ல் (26) வீழ்ந்தார்.

வெஸ்லே (39), மருமானி கைகொடுக்க, ஜிம்பாப்வே 100 ரன்களை எட்டியது. பிராட் ‘டக்’ அவுட்டானார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 125/7 ரன் மட்டும் எடுத்தது. மருமானி (27) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் மயங்க், பிரின்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

வைபவ் அசத்தல்

இந்திய அணிக்கு அபிஷேக், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் தந்தது. இரண்டாவது ஓவரை நிகரவா வீசினார். இதன் 2வது பந்தில் சிக்சர் அடித்த வைபவ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். தொடர்ந்து 4வது பந்திலும் சிக்சர் அடிக்க, இந்தியாவுக்கு மொத்தம் 20 ரன் கிடைத்தன.

மறுபக்கம் தடுமாறிய அபிஷேக், 1 ரன்னில் (8 பந்து) முசரபானி பந்தில் அவுட்டானார். தனது விளாசலை நிறுத்தாத வைபவ், ஈவன்ஸ் வீசிய 4 வது ஓவரில் முதல் இரு பந்தில் பவுண்டரி, சிக்சர் என அடித்தார். அடுத்து வந்த முசரபானி ஓவரில் (5வது), கடைசி 4 பந்தில் 4, 2, 6, 4 என ரன் மழை பொழிந்தார் வைபவ். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த இஷான் கிஷான், நியூமன் ஓவரில் மூன்று பவுண்டரி விளாச, இந்திய அணி 6 ஓவரில் 66/1 ரன் குவித்தது. நிகரவா வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் 2 ரன் எடுத்த வைபவ், 18 பந்தில், சர்வதேச ‘டி-20’ அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். அடுத்த பந்தில் வைபவ் (50 ரன், 19 பந்து), பென் கர்ரானிடம் ‘கேட்ச்’ கொடுத்து திரும்பினார்.

எளிய வெற்றி

இஷானுடன் ஜோடி சேர்ந்தார் ஷ்ரேயஸ் ஐயர். ஈவன்ஸ் பந்தில் இஷான் சிக்சர் அடிக்க, ஷ்ரேயஸ் தன் பங்கிற்கு பவுண்டரி விளாசினார். இந்திய அணியின் ஸ்கோர், 10.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது. 3 வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த நிலையில், இஷான் (35) முசரபானி பந்தில் வீழ்ந்தார்.

பின் வந்த திலக் வர்மா ஒரு பவுண்டரி அடிக்க, வெற்றி எளிதானது. இந்திய அணி 13.2 ஓவரில் 126/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் (28), திலக் வர்மா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

சாதித்த இளம் வீரர்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அரைசதம் விளாசிய இளம் வீரரானார் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது, 118 நாள்). ஜிம்பாப்வேக்கு எதிராக 19 பந்தில், 50 ரன் (4X6, 4X4) குவித்தார். இதற்கு முன் (2020, எதிர்: அமெரிக்கா), நேபாளத்தின் குஷால் மல்லா (15 வயது, 340 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.

* ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் ஆனார் வைபவ் (15 வயது, 118 நாள்). இதற்கு முன் மால்டா அணிக்கு எதிராக விளாசிய ஜிப்ரால்டர் வீரர் லுாயிஸ் புரூஸ் (16 வயது, 56 நாள், 2021) முதலிடத்தில் இருந்தார்.

* ஐ.சி.சி., முழு உறுப்பினர் பெற்ற அணிகளுக்கு எதிரான ‘டி-20’ல் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என பெருமை பெற்றார் வைபவ். ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் (17 வயது, 296 நாள், 2019ல்) ௨வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Source link