சென்னை: ‘தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்த தேவையோ 11,391 ஏக்கர் நிலம். ஆனால், மாநில அரசு இதுவரை, 2,910 ஏக்கர் தான் ஒதுக்கி இருக்கிறது’ என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, எட்டு புதிய பாதைகள், மூன்று அகல பாதைகள், எட்டு இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்த, 27,282 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்த தேவையோ, 11,391 ஏக்கர் நிலம்; ஆனால், மாநில அரசு இதுவரை, 2,910 ஏக்கர் தான் ஒதுக்கி இருக்கிறது.
இதனால், திட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக, ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும், ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி முக்கிய தடையாக உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் பல்வேறு ரயில் பாதை திட்டங்களுக்கு, 11,391 ஏக்கர் நிலம் தேவை. தற்போது வரை, 26 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
