தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தல் வழக்கு: இழப்பீட்டு தொகையை அதிகாரிகளே தீர்மானிப்பதா?

— டில்லி சிறப்பு நிருபர் -:

தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு களை அரசு அதிகாரிகளே தீர்த்து வைக்கும் நடைமுறைக்கு, உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் மற்றும் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை தீர்மானிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வு நேற்று விசாரித் தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொதுவாக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையை தீர்மானிப்பது முற்றிலும் நீதித்துறை சார்ந்தது. மேலும், அந்த தொகையை தீர்மானிக்க நீதித்துறையின் நடுவர் மன்றங்கள் இருக்கின்றன.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது மட்டும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் முழு அதிகாரமும் அரசு அதிகாரிகள் வசம் சென்றுவிடுகிறது. உச்ச நீதிமன்றத்தால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தேசிய நெடுஞ்சா லைகளை ஒட்டிய நிலங்கள் அதிக மதிப்பு கொண்டவை. அந்த நிலங்களை கையகப்படுத்தும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான வட்டி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ”தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இழப்பீடு தொகை தொடர்பான வழக்குகளை நீதித்துறை பயிற்சி பெற்ற அமைப்புகள் விசாரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது,” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘மத்திய அரசே சட்டத் திருத்தத்தை கொண்டு வர பரிசீலித்து வருவதால், இதில் உடனடியாக தலையிட விரும்பவில்லை’ என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Source link