– நமது சிறப்பு நிருபர் –
ஆந்திரா, தெலுங்கானாவில் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வரும் சூழலில், அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஹைதராபாதில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக பி.ஆர். எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரோஹித் ரெட்டி, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., புட்டா மகேஷ் யாதவ் உட்பட 11 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
சப்ளை
இதற்கு முன் போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத் சிங், ராணா டகுபதி, முமைத் கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் சிக்கினர். ‘சின்தெடிக் டிரக்ஸ்’ எனப்படும் செயற்கை போதைப் பொருட்களின் முக்கிய மையமாக ஹைதராபாத் நகரம் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
நைஜீரியா மற்றும் தென்னாப்ரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருட்கள், மும்பை, டில்லி, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்கள் வழியாக வினியோகிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்படும் போதைப் பொருட்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் விருந்துகளில் ‘சப்ளை’ செய்யப்படுகின்றன.
சமீபத்திய தரவுகளின்படி, தெலுங்கானாவில் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு 30 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
ஹைதராபாதில் உள்ள மனநல நிறுவனத்தில், 2023 – 25 வரையிலான காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையானோர் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 108 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடவடிக்கை
இங்கு, இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை தடுக்கும் வகையில், ‘ஈகிள்’ எனப்படும் போதைப் பொருள் சட்ட அமலாக்கத்திற்கான சிறப்பு செயற்குழுவை முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைத்துள்ளார்.
ஆந்திராவில் செயற்கை போதைப் பொருட்களைவிட, இயற்கையாக பயிரிடும் கஞ்சாவுக்கு ஏராளமானோர் அடிமையாகியுள்ளனர். பழங்குடியினர் பகுதி உட்பட பல இடங்களில் கஞ்சா பயிரிடப்படும் நிலையில், அவற்றை தடுக்க தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கடந்த 2024 ஜூன் முதல் இந்தாண்டு துவக்கம் வரை, 900க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50,000 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும், 120 டன் கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.
