அதாவது, கட்டுமான துறையில் நிலவிவந்த புகார்களுக்கும், சிக்கல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி தற்போது வைக்கப்பட்டுள்ளது..
பொதுவாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டிடிசிபி சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுரடிக்கு, 27 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கட்டட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள், கட்டுமான நிறுவனங்களை அணுகி, கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டட அனுமதி கோப்புகள் எந்த காரணமும் இல்லாமல், காலவரையன்றி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் புகார்களும் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த விவகாரம் பல ஆண்டுகளாகவே தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் கட்சி நிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால் வீடுகளின் விலை சாதாரணமாக இருக்க வேண்டியதை விட மிக அதிகமாக உயர்ந்து, ஒருகட்டத்தில் எளிய மக்களால் வாங்க முடியாத நிலைக்கு சென்றது.
