முன்னணி தனியார் வங்கிகள் சிலவற்றின் என்.ஐ.எம்., எனப்படும் நிகர வட்டி வருமான விகிதம் குறைந்ததை தொடர்ந்து அவற்றின் பங்குகள் சரிவை சந்தித்து உள்ளன. ஆனால், இதை தற்காலிக தாக்கமாகவே பார்க்க வேண்டும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பந்தன் வங்கி’ உள்ளிட்ட தனியார் வங்கிகளின் நிகர வட்டி வருமான விகிதம், அண்மை காலாண்டில் குறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதனால், இவ்வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
![]() |
பலவீனம் அல்ல இந்த விகிதம் குறைவதால் மட்டும் ஒரு வங்கி பலவீனம் அடைந்து விட்டதாக கருதக் கூடாது என ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வைப்பு தொகைகளுக்கு அதிக வட்டி வழங்க வேண்டிய நிலை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றங்கள், கடன் வழங்குவதில் அதிகரித்துள்ள போட்டி மற்றும் குறைந்த வருமானம் தரும் முதலீடுகளில் அதிக நிதி ஒதுக்கப்படுவது ஆகியவையும் காரணங்களாகும்.
மொத்த லாபம், வாராக்கடன், சொத்து தரம், மூலதன போதிய விகிதம் உள்ளிட்ட அனைத்து நிதி குறியீடுகளையும் ஒருங்கிணைத்தே வங்கிகளின் செயல்திறனை மதிப்பிட வேண்டும்.
சரிவு தற்காலிகமானது வங்கிகளின் அடிப்படை லாபத்திறனை அளவிடும் முக்கியமான குறியீடுதான் என்.ஐ.எம்.,. எனவே, காலாண்டு முடிவுகளை ஆய்வு செய்யும் முதலீட்டாளர்கள் இந்த விகிதத்தை தவறாமல் கவனிக்க வேண்டும் என ‘என்ரிச் மனி’ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பொன்முடி.ஆர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது தனியார் வங்கி துறையே என்.ஐ.எம்., அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது ஒரு காலாண்டில் மட்டும் என்.ஐ.எம் ., குறைந்ததால் பதற்றம் அடைய தேவையில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டிபாசிட்களை ஈர்க்க வங்கிகள் அதிக வட்டி வழங்கியதால் நிதி திரட்டும் செலவு உயர்ந்துள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு சுழற்சியை தொடர்ந்தால், வரும் காலங்களில் டிபாசிட் வட்டி குறைய வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் என்.ஐ.எம்., மேம்படும் சூழல் உருவாகலாம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

