தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 26) என்ற இளைஞர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்தார். அதன்படி கடந்த 17ஆம் தேதி (17.07.2026) மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்து 120 முதல் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அருணாசலத்தை காவல்துறையினர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்
இத்தகைய சூழலில் தான், கடந்த 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில், தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (23.07.2026) காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை, குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் 4 மருத்துவர்கள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முழு வெளிப்படைத்தன்மைக்காகப் பலத்த பாதுகாப்புடன் இந்த உடல் கூறாய்வு நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு இருந்தபோது அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்ததாக அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டினர். ஆனால், அருணாச்சலம் கஸ்டடியில் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்த காவல்துறையினர், அவர் லாக்கப்பில் இருந்தபோது திடீரெனத் தானே மயங்கி விழுந்துவிட்டதாக விளக்கம் அளித்ததுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
