எழுதியவர்கள்: ஹரிகிஷன் சர்மா , தாமினி நாத் , ஜதின் ஆனந்த்
தேர்வுத் தாள் கசிவு வழக்குகள்: குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம்… கடுமையான புதிய சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் (Fast-Track Courts) அமைக்கப்படும் என்றும், இதற்கான கடுமையான புதிய சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இது குறித்து நேற்று (ஜூலை 23) இரவு வெளியிட்ட காணொலி உரையில் பேசிய பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடுமையாக பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினை. கடந்த இரண்டரை மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை இழக்காமல் இருக்க விரைவாகத் தேர்வுகளை நடத்துவது அரசின் முதல் பொறுப்பாக இருந்தது.
அதன்படி, சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கான தேர்வுகள் குறுகிய காலத்தில் நடத்தப்பட்டு, ஜூலை 19ஆம் தேதி முடிவுகளும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும் செய்தி வந்தாலும், அதில் திருப்தி அடையாமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக விரைவு நீதிமன்றங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இரவு நேரம் வரை பணியாற்றிய அதிகாரிகள், விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனை விதிகள் இடம்பெற்ற சட்ட வரைவை என்னிடம் சமர்பித்துள்ளனர். அது இன்று (ஜூலை 24) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
மேலும், அமைச்சரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் இறுதி செய்யப்பட்ட இந்த மசோதா, அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். இதற்கு முன் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, “இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் அரசுக்கு மிக முக்கியமானது. வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு, வினாத்தாள் கசிவை எதிர்த்து சி.ஜே.பி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் மத்தியில் வெளியாகியுள்ளது. எனினும், விரைவு நீதிமன்ற அறிவிப்பு மட்டுமே போதாது; பொறுப்பேற்பும் அமைச்சரின் ராஜினாமாவும் அவசியம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த நீதிமன்றங்கள் இந்த வாரத்திலேயே செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வழக்குகள் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த முடிவுக்கு பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசின் உறுதியை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது என்றார். பாஜக தலைவர் நிதின் நபின், “பிரதமர் மோடி ஒரு உறுதியை எடுத்தால் அதை முழுமையாக நிறைவேற்றுவார் என்பதை நாடும் உலகமும் அறிந்துள்ளது” என்று கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயங்குவது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, தேர்வுத் தாள் கசிவு போன்ற மிகக் கடுமையான பிரச்சினைக்கு விரைவு நீதிமன்றங்களை அமைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் பிரதமரின் முடிவு, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசின் அக்கறையையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
