எகிப்து நாடு தனது வரலாற்றுப் பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ‘ராஜாக்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் அமைந்துள்ள, எகிப்திய வரலாற்றின் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவரான மூன்றாம் அஃமென்ஹோடெப் (Amenhotep III) என்பவரின் 3,400 ஆண்டுகள் பழமையான கல்லறை, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தீவிரப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அழகான நாடுதான்… ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல; ரெட் சோனில் இருக்கும் டாப் டெஸ்டினேஷன்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் தரையிலிருந்து 46 அடி ஆழத்திற்கு இறங்கி, இந்த பிரம்மாண்டமான நிலத்தடி கல்லறையைப் பார்வையிட எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
யார் இந்த மூன்றாம் அஃமென்ஹோடெப்?
கிமு 14-ஆம் நூற்றாண்டில் (கிமு 1390 – 1352) எகிப்தை ஆட்சி செய்த ’18-வது வம்சத்தைச் சேர்ந்த’ (புகழ்பெற்ற மன்னர் ஆவார். இவரது ஆட்சிக் காலம் பழங்கால எகிப்தின் அமைதி, செழிப்பு, கலை மற்றும் கட்டிடக்கலையின் உச்சக்கட்டப் பொற்காலமாகக் கருதப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற எகிப்திய மன்னர் துத்தன்காமனின் தாத்தாவும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகள் நீடித்த பிரம்மாண்டப் புனரமைப்பு
இந்தக் கல்லறை முதன்முதலில் 1799-ஆம் ஆண்டு பிரெஞ்சு படையெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், இயற்கைச் சீற்றங்கள், நிலநடுக்கங்கள், ஈரப்பதம் மற்றும் பாறைகளின் அரிப்பு காரணமாக இதன் சுவர்கள் மற்றும் சுவர் சித்திரங்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்தன. 2000-களின் தொடக்கத்தில் ஜப்பான் நாட்டின் ‘வாசேதா பல்கலைக்கழகம்’ மற்றும் எகிப்திய தொல்பொருள் நிபுணர்கள் இணைந்து இதன் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர்.
நிலத்தடி பாறைகளைப் பலப்படுத்துதல், சுவர்களில் உள்ள அரிய வண்ண ஓவியங்களை மீட்டெடுத்தல், பழங்கால எகிப்திய எழுத்துக்களைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பான விளக்குகள், பாதைகளை அமைத்தல் என 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணிகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன.
கல்லறையின் உள்ளே என்னென்ன சிறப்புகள் உள்ளன?
46 அடிகள் ஆழத்தில் உள்ள இந்த நிலத்தடி புதைவிட அறைக்குச் செல்லும் வழியெங்கும் பழங்கால எகிப்தியக் கடவுள்களான ‘அனுபிஸ்’, ‘ஒசிரிஸ்’ மற்றும் ‘ஹோரஸ்’ ஆகியோருடன் மன்னர் அஃமென்ஹோடெப் பேசுவது போன்ற கண்கவர் சுவரோவியங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கையை விவரிக்கும் ‘அம்டுவாட்’ (Amduat) என்ற எகிப்திய புனித நூலின் நூற்றுக்கணக்கான வரிகளும், விண்மீன்கள் நிறைந்த வானத்தை உணர்த்தும் நீல நிறக் கூரை ஓவியங்களும் இன்றும் மாறாத வண்ணங்களுடன் காட்சி அளிக்கின்றன. எகிப்திற்குச் செல்லும் வரலாற்று விரும்பிகளுக்கு இந்த இடம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
