சென்னை: ‘தினமலர்’ நாளிதழின், ‘தாமரை பிரதர்ஸ் மீடியா’ பதிப்பகம் சார்பில், அஸ்பயர் சுவாமிநாதன் எழுதிய, ‘இன்சைடு தி வார் ரூம்’ ஆங்கில நுால் வெளியீட்டு விழா, சென்னை, தி.நகரில் நேற்று நடந்தது.
நுாலை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டார். காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இப்புத்தகத்திற்கு, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர், முன்னுரை எழுதி உள்ளனர்.
விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: ‘தினமலர்’ நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி: அஸ்பயர் சுவாமிநாதன், மிகவும் எளிமையான முறையில், மிகவும் கடினமான விஷயத்தை மெருகேற்றி, ஒரு நுாலை எழுதியுள்ளார். அதில், சிறு, சிறு பகுதிகளாக, ஒவ்வொரு பிரச்னைகளையும் பிரித்து, அவற்றை மிகவும் சுலபமாக அணுகும் வகையில் வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் எடுத்துக் கொண்டு, அதை அரசு எப்படி கையாண்டுள்ளது என்பதை, புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில், அதாவது, தேர்தல் நடக்க உள்ள சமயத்தில், அழகான ஒரு நுாலை தந்துள்ளார். அமைச்சர் தியாகராஜன்: ஜனநாயகப்படி தேர்தல் துவங்கிய காலத்திலிருந்து, அரசியல் சார்ந்த பிரச்னைகள், மாற்றமின்றி தொடர்ந்தாலும், ஊடகம், தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் பெரிதும் மாறியுள்ளன.
தமிழகத்தில் அரசியல் தகவல் பரிமாற்ற அமைப்புகளில், சுவாமிநாதன் முன்னோடியாக இருந்தார். அ.தி.மு.க.,வில் முதலில் தகவல் தொழில் நுட்ப பிரிவு துவக்கப்பட்டது. அதன் பின்பே, நான் சார்ந்த கட்சியில், 2017ல் துவக்கப்பட்டது.
சூழ்நிலை
முன்பெல்லாம், சமூக ஊடகம் சிறிய பங்கே வகித்தது. இன்றைய சூழலில், ஐ.டி., துறை என்பது முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சுவாமிநாதனின் அனுபவம், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில், அவர் எடுத்த முடிவுகள், இந்த புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அது அரசியலுக்கு புதிதாக வருவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இளைஞர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். இத்தகைய நுால்கள், அவர்களின் புரிதலையும், திறமையையும் மேம்படுத்த உதவும்.
நுால் ஆசிரியர் அஸ்பயர் சுவாமிநாதன்: இந் நிகழ்ச்சி நடப்பதற்கு காரணம் தாமரை. அதாவது ‘தாமரை பிரதர்ஸ்’ பதிப்பகம். அரசியலை பொறுத்தவரை, ஒரு சிலர் முடிவு எடுக்காமலேயே இருப்பர். ஒரு சிலர் முடிவு எடுத்து விட்டு, தவறோ, சரியோ அதன் வழி செல்வர். அரசியலில் முடிவு எடுப்பது என்பது மிக முக்கியம். தேர்தலில் வெற்றி என்பது, மக்களின் சிந்தனை ஓட்டத்தை வைத்தே முடிவு செய்யப்படும்.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து, சமீபத்தில் ஒரு ‘சர்வே’ எடுத்தோம். அதன்படி, சமீபத்தில் 5,000 ரூபாய் தொகை பெற்ற பயனாளிகளின் ஓட்டு கண்டிப்பாக தி.மு.க.,வுக்குத்தான். மீதி உள்ள ஓட்டுகள் பிற கட்சிகளுக்கு பிரிகின்றன. வரும் தேர்தலில், தற்போதுள்ள ஆட்சிதான், மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், எதிர்தரப்பினர் குறித்து சர்வே எடுத்தபோது, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டனரோ என்ற எண்ணம் உள்ளது.
சாதகம்
ஒரு தரப்பினர் வாய் தடுமாறி பேசும் வார்த்தைகளை வைத்து, மறு தரப்பினரின் ‘வார் ரூம்’ வாயிலாக, அரசியல் செய்வர். அது சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அரசியல் தலைவர்கள் பேசும் வார்த்தை, செயலைப் பொறுத்து, சில முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
கார்த்தி சிதம்பரம்: அனைத்து கட்சிகளிலும், இப்போது ‘வார் ரூம்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். அதன் விளைவாக, சில நேரங்களில் நச்சுதன்மையான ஒரு தகவல் தொழில்நுட்ப அணி உருவாகிவிடும். வார்ரூம், ஐ.டி.விங், பிரசார வியூக வகுப்பாளர்கள் இல்லாமல், இனி எந்த ஒரு கட்சியும் தேர்தலை சந்திக்க முடியாது. இவை எல்லாம் வேண்டாம் என நினைத்தால், வட கொரியாவுக்குதான் செல்ல வேண்டும்.
இன்றைய உலகில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஒரு அரசியல் கட்சியையோ, அரசியல் கட்சி தலைவரையோ அல்லது ஒரு கருத்தியலையோ, நிலை நிறுத்தி வைப்பது சிரமம்தான். அதற்குதான், வியூக வகுப்பாளர்கள் அவசியம்.இன்றைய காலகட்டத்தில், லோக்சபாவிலும், சட்டசபையிலும், அனைவரும் கட்சி ரீதியாக ஓட்டளிக்கிறோம். யாருமே, யார் மனதையும் மாற்றுவது கிடையாது.
தற்போது, ஒரு விஷயத்தை சமூக வலைதளங்களில் படித்தால், அது சார்ந்த விஷயம்தான் மீண்டும் மீண்டும் வரும். ஒருவர் பா.ஜ.,வை தீவிரமாக ஆதரிக்கிறார் என்றால், காங்கிரஸ் என்ன சொன்னாலும், அது அவருக்கு தவறாகத்தான் தெரியும். தீவிரமான காங்கிரஸ்காரருக்கு, பா.ஜ., என்ன சொன்னாலும், அது தவறாகத்தான் தெரியும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு, கடவுளுக்கு நிகரான தகுதியை கொடுத்து விடுகிறோம். அதனால், அவரை தவறாக சொல்பவர்களை ஏற்க மாட்டார்கள்.
ஒரு தீர்மானிக்கப்பட்ட கருத்துக்குள் பயணித்து வருகிறோம். மனதை மாற்றிக்கொள்வதற்கு, இங்கு இடமே இல்லை. எந்த முடிவும் எடுக்காமல் இருப்பவர்களுக்கே, நாம் இப்போது போட்டி போடுகிறோம்; யுக்திகளை கையாள்கிறோம்.
மனப்பான்மை
இந்த புத்தகத்தில், அஸ்பயர் சுவாமிநாதன், தேர்தல் அரசியல் மட்டும் பேசவில்லை; நிர்வாகம் சார்ந்த விஷயங்களையும் பேசியுள்ளார். அரசியலில், ஒரு காரியத்தை செய்கிறோமோ இல்லையோ, அதை காதுகொடுத்து, கருணையுடன் கேட்க வேண்டும். ஆனால், அந்த குணம் இன்று பெரும்பாலானோரிடம் இல்லை.
பொறுமையாக, ஒருவரின் பிரச்னையை கேட்க, நமக்கு நேரம் கிடையாது. கருணையுடன், கேட்கும் மனப்பான்மையுடன் இருப்பவரே, அரசியலில் நிலைத்து நிற்க முடியும். தொழில் நுட்பம் வந்தாலும், யுக்திகள் தயார் செய்தாலும், மனிதாபிமானம் இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தற்போது, தேர்தல் காலம்.
இந்த காலகட்டத்தில், எது உண்மை, எது பொய் என பிரித்து பார்ப்பது அவசியம். ஆனால், அது சிரமம்தான். தற்போது, சமூகவலைதளங்களில் எல்லாம் வரம்பு மீறி செல்கிறது. இந்த தேர்தலில், அனைத்து கட்சிகளும், எதிர்மறையான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழாவில், ‘தினமலர்’ இணை இயக்குநரும், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இயக்குநருமான ரா.லட்சுமிபதி, ‘தினமலர்’ இணை இயக்குநர் ஆ.லட்சுமிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
